மறுமை உலகின் வெற்றி தோல்விக்கு இந்த உலக வாழ்க்கை ஒரு தேர்வுகளமாக ஆக்கப்பட்டுள்ளது என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளிலே ஒரு விஷயம். இதை நேரடியாக திருக்குர்ஆனின் பல இடங்களில் தெளிவு படுத்திய அல்லாஹ் (ஸுப்) தனது தூதர் வழியாகவும் போதித்துள்ளான்.
அதுமட்டுமல்ல இவைகளையெல்லாம் சொல்லிவிட்டு தேர்வுக்களமாகிய இவ்வுலக வாழ்க்கையை தேர்வு செய்து கொள்ளாதீர்கள் என்றும் எச்சரிக்கின்றான்.
அல்குர்ஆன்
79:3839 யார் வரம்புமீறி இவ்வுலக வாழ்க்கையை தேர்தெடுத்துக்கொண்டாரோ நிச்சயமாக நரகம் அதுவே அவர் தங்குமிடம்.
2:86 அவர்கள் தாம் மறுமையைவிற்று இவ்வுலக வாழ்வை வாங்கிக் கொண்டவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
9:38 மறுமையைவிட இவ்வுலக வாழ்வில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.
87:1617 எனினும் நீங்களோ இவ்வுலக வாழ்க்கையை தெரிவு செய்து கொள்கின்றீர்கள். மறுமைதான் மிகச்சிறந்ததும் மிக்க நிலையானதுமாகும்.
6:32 மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமே அன்றி வேறில்லை (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்கமாட்டீர்களா?
ஆனால் இதைத்தான் நாம் இன்று செய்து கொண்டிருக்கின்றோம். இங்கு தான் நாம் வழுக்கி விழுந்து மறுமை வாழ்க்கையை கேள்விக்குறியாக ஆக்கிக்கொண்டுள்ளோம். நாம் இனிமேலாவது விழித்துக்கொண்டு கேள்விக்குறியாகி கொண்டிருக்கின்ற நமது மறுமைக்கான தேர்வுக்களமாக மட்டும் இவ்வுலக வாழ்க்கையை அல்லாஹ் (ஸுப்) கற்றுத் தந்துள்ள வழிப்படி ஆக்கிக் கொள்வோம் என முதலில் உறுதி கொள்வோமாக!
இந்த உலக வாழ்வை தேர்வு செய்வது!
இன்று பெரும்பாலான முஸ்லீம்கள் இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்து கொண்டுவிட்டனர். நமது நடவடிக்கைகள் அதைத் தெளிவாக உணர்த்திக் கொண்டுள்ளன. அவைகளை விரிவாக இதன் தொடரிலே காண்போம் இன்ஷா அல்லாஹ்.
இந்த உலக வாழ்க்கை அல்லாஹ் (ஸுப்) நமக்கு கொடுத்தது. மற்றப்படைப்பினங்களை விடவும் மனிதன் மேன்மையான படைப்பு என்று அல்லாஹ் (ஸுப்)வும் கூறுகின்றான். அதுமட்டுமல்ல மனிதனுக்கு மற்ற ஜீவராசிகளையும் வசப்படுத்திக் கொடுத்ததாகவும் பல தாவரங்களை உண்டாக்கி தந்திருப்பதாகவும் அல்லாஹ் (ஸுப்) சொல்லிக்காட்டுகிறான்.
நம்மைப் படைத்து நமக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த அல்லாஹ்வே இந்த உலக வாழ்க்கையை தேர்ந்து எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று எப்படி சொல்ல முடியும்? நாம் இவைகளை எல்லாம் அனுபவித்து மகிழவேண்டும் என்றுதானே அல்லாஹ் நமக்கு வேண்டிய வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளான். நாமாகவே இவைகளை தேர்வுசெய்து கொள்ளவில்லையே! என்று நாம் நினைக்கக்கூடும். நாம் இந்த உலகிலே கஷ்டப்பட்டு உழல வேண்டிய அவசியம் என்ன? அல்லாஹ் (ஸுப்) ஹலாலாக்கிய முறைப்படி சம்பாதித்து இந்த உலகில் சுகபோகமாக வாழ்ந்து மறுமையிலும் வெற்றிபெற என்ன தடை? இப்படியான என்னங்கள் இன்று நம்மிடையே இருந்து கொண்டிருக்கிறது.
இங்கு நாம் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அல்லாஹ்வும் அல்லாஹ்வின் துதரும் அனுமதித்த முறையிலே எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் அதன் மூலம் நமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்கு எந்த ஒரு தடையுமில்லை.
இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுக்துக் கொள்வது என்பது என்ன? என்பதை நாம் குர்ஆன் நபி வழி அடிப்படையில் புரிந்து கொண்டால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அது ஒரு அடித்தளமாக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.
இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கெண்டால் அவர்கள் நஷ்டவாளிகள் என்று அல்லாஹ் (ஸுப்) கடுமையாக பல இடங்களில் எச்சரிக்கின்றான். அவைகளில் சில வசனங்களை மேலே கண்டோம். அப்படியென்றால் இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது என்ன? என்பதை நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதானே!
இன்ஷா அல்லாஹ் தொடரும்...............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment