குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்..!
ஆதாரப்பூர்வமான நபி மொழி குர்ஆனுக்கு முரன்படுமா? இதைத்தான் நாம் அடுத்ததாக அலச கடமைப்பட்டுள்ளோம். அறிவிப்பாளர்களை பொருத்தவரை எந்த குறையும் இல்லாத நபி மொழிகளாக புகாரியிலும் முஸ்லிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ள சில நபி மொழிகள் (கிட்டத்தட்ட ஐம்பது) குர்ஆனுடன் நேரடியாக மோதுவதாக தற்சமயம் தமிழகத்திலே பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இதைச் செய்பவரும் மதிப்பிற்குரிய மௌலவி பி.ஜே. அவர்கள் தான். இவர் சொல்லக்கூடிய இந்த நபி மொழிகளைப் பொருத்தவரை இமாம் புகாரியோ முஸ்லிமோ வேறு அறிஞர்களோ இவைகளை சரியில்லை என்று சொல்லவே இல்லை.
பி.ஜே. அவர்களின் கருத்து
அறிவிப்பாளர்களை பொருத்தவரை எந்தக் குறையும் இல்லை இருந்தாலும் அந்த நபி மொழியின் கருத்து குர்ஆனுடன் நேரடியாக மோதுவதாக இருக்கிறது. அவைகளை குர்ஆனுடன் பொருத்திப் பார்த்தால் எந்த விதத்திலும் பொருந்தவில்லை. இதை ஏற்றுக்கொண்டால் பல குர்ஆன் வசனங்களை மறுக்கக்கூடிய நிலைக்கு ஆளாக்கக்கூடியது. நபி மொழி ஓரிரு அறிவிப்பாளர்கள் உறுதிப்படுத்தக் கூடியவை. மனிதர்களிடமிருந்து தவறுகள் வர சந்தர்ப்பம் உண்டு. இறை வேதத்தின் நிலை அப்படியில்லை. ஆகையால் இறை வேதத்தை ஏற்று முரண்படக்கூடிய நபி மொழிகளை தட்டி விடுகிறோம் என்று விளக்கத்தை அவருக்கே உரிய பாணியில் கூறுகின்றார்.
இதைக் கேட்கும் போது நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு சகோதரர் பி.ஜே. சொல்வது சரிதான் என்று தோன்றும். மக்களைக் கவரக்கூடிய அவருடைய பேச்சாற்றல்தான் அதற்கு காரணம். நாமும் அப்படித்தான் நினைத்திருந்தோம். இவர் சொல்லக்கூடிய ஹதீஸ்கள் உண்மையிலே முரண்படுகின்றனவா? என்பதைத்தான் நாம் பார்க்க இருக்கின்றோம் இன் ஷாஅல்லாஹ்.
விளங்கியதில் தவறு
ஜகாத் விஷயத்தில் பி.ஜே. அவர்கள் எப்படி தவறாக விளங்கிக் கொண்டு ஒரு பொருளுக்கு ஒரு தடைவ என்று சொன்னாரோ அதைப்போலவே நபி மொழி விஷயத்திலும் இவர் விளங்கிக் கொண்டதுதான் தவறாக இருக்கின்றது. ஆதாரப்பூர்வமான நபி மொழி குர்ஆனோடும் நவீன விஞ்ஞானக் கண்டு பிடிப்போடும் அழகாக எந்த வித முரண்பாடும் இல்லாமல் பொருந்திப் போகின்றது. அவரது விளக்கமென்ன? எவ்வாறு பொருந்திப் போகிறது என்பதையெல்லாம் நாம் அலசிப் பார்க்க இருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ். அதற்கு முன்பாக ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
சந்தேகத்தை உண்டாக்குகிறார்
சகோதரர் பி.ஜே. அவர்கள் கூறுவது நமக்கு தெரியாத நம்மால் கண்டு பிடிக்க முடியாத ஏதோ ஒரு குறை அந்த அறிவிப்பாளர்கள் விஷயத்தில் இருக்கின்றது என்கின்றார்.
அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமான அறிவிப்பாளர்கள்தான். ஆனால் ஏதோ நடந்திருக்கிறது என்கின்றார். இங்கு ஆதாரப்ர்வமான நபி மொழிகளில் சந்தேகத்தை உண்டுபன்னுவது யார்? என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி ஆதாரப்பூர்வமான நபி மொழியை ஒரு முஸ்லிம் சந்தேகப்பட ஆரம்பித்தால் அதன் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும்.
பொதுவாக முக்கிய அமல்களின் விளக்கங்கள் அதிகமாக நபி மொழிகளில் இருந்துதான் எடுக்கப்படுகின்றன. இஸ்லாமிய சட்டங்களுக்கு நபி மொழிதான் ஆதாரமாக இருக்கின்றது.
ஒரு முக்கியமான அமலை செய்யாமல் ஒரு முஸ்லிம் இருக்கின்றான். அவனிடம் ஏன்? என்று கேட்டால் அவன் பி.ஜே. சொல்கின்றபடியான அடிப்படையில் விளக்கத்தை சொல்லிவிட்டு அதை நியாயப்படுத்தி விடுவான். அந்த அமலை செய்வது அவனைப் பொருத்தவரை கஷ்டமாக இருக்கின்றது. ஒரு ஆத்மாவை அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சோதிக்க மாட்டான் என்பது குர்ஆன் வசனம். ஆகவே அந்த அமலை செய்யச்சொல்கின்ற நபி மொழி ஆதாரப்பூர்வமானதாக இருந்தாலும் குர்ஆன் வசனத்திற்கு முரண்படுகிறது என்று சொல்லி அல்லாஹ்வின் துதர் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார்கள் ஏதோ நமக்குத் தெரியாத ஒரு குறை அந்த நபி மொழியில் இருக்கிறது என்று நியாயப்படுத்துவான்.
அடுத்தவன் பார்ப்பான் அவனுக்கு செய்ய முடியாத வேறொரு அமலுக்கும் இதே காரணத்தைச் சொல்லி நபி மொழியை அலட்சியப் படுத்த முடியும். கடைசியில் அல்குர்ஆனைத்தவிர மற்ற விஷயங்கள் ஏதும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை என்று குர்ஆனை மட்டும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினால் போதும் என்பதற்கு இது அடித்தளம் அமைக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
இஸ்லாத்தின் ஆதாரமே தரைமட்டம்
ஒரு மார்க்க அறிஞர் நாற்பது ஐம்பது நபி மொழிகள் குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தோன்றும். அவர் அவைகளை ஏற்கக்கூடாது என்பார். இன்னொரு அறிஞருக்கு வேறு நுறு ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று விளக்கம் கொடுப்பார்.
இப்படியாக ஒவ்வொருவரும் கருத்து குர்ஆனோடு முரண்படுகிறது என்ற அந்த அளவு கோலை கையில் எடுத்தால் நபி மொழிகளில் பெரும்பாலானவற்றை மறுப்பது ஒரு பெரிய விஷயமில்லை.
அதுமட்டுமல்ல அறிஞர்கள் இப்படி ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மறுப்பதை பார்க்கும் பாமரமக்கள் எல்லா நபி மொழிகளையும் சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவார்கள்.
பின்பு எந்த ஒரு நல்லமலை செய்யும் போதும் இந்த அமலை செய்ய வேண்டும் என்று அறிவிக்கக்கூடிய நபி மொழி சரியானது தானா? என்ற சந்தேகம் வரும். பி.ஜே. சொல்வது போல ஏதோ ஒரு குறை அதில் இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும். பின்பு இப்படிப்பட்ட நபி மொழி சொல்லும் அமலை செய்ய வேண்டுமா? அப்படி செய்தால் நற்கூலி கிடைக்குமா? என்ற சந்தேகம் வரும். நற்கூலி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை பித்அத்தான காரியத்தை செய்த தண்டனைக்கு ஆளாக நேரிடுமோ? என்றெல்லாம் நினைக்க வழி வகுக்கும். அதன் விளைவாக அந்த அமல்களை செய்வதில் இருந்து விலக காரணமாக அமையும். திருக்குர்ஆனை மட்டும் பின்பற்றி அமல்களை செய்தால் போதும் என்ற மனநிலைக்கு இது அடித்தளம் அமைக்கும்.
நாம் கேட்பது
குர்ஆனுக்கு முரண்பட்டால் தள்ளிவிட வேண்டும் என்று பி.ஜே. சொல்கின்றார். குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று முடிவு செய்து கொண்டு அதன் அடிப்படையில் பேசுகின்றார்.
இந்த ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வதினால் பல குர்ஆன் வசனங்களை மறுக்க வேண்டி வரும். நபி மொழிகளில் தவறு நிகழ சந்தர்ப்பம் உள்ளது திருக்குர்ஆன் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளது. ஆகையால் இந்த நபி மொழிகளை ஏற்று குர்ஆனை நிராகரிக்கும் நிலைக்கு போய் விடக் கூடாது. அதனால்தான் இந்த ஹதீஸ்களை நிராகரித்துவிட வேண்டும் என்கின்றார்.
இங்கு நாம் கேட்பது என்னவென்றால் பி.ஜே. சொல்லக்கூடிய ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகின்றனவா? குர்ஆனுக்கு இந்த ஹதீஸ்கள் முரண்பட்டால்தான் பி.ஜே. சொல்கின்ற விளக்கங்களைப் பற்றி நினைக்க வேண்டும். இவர் முரண்படுகிறது என்று விளங்கிக் கொண்டால் அது முரண்பட்டதாக ஆகி விடுமா? அவைகள் முரண்படவில்லை என்பதுதான் உண்மை.
இங்கு அவர் எழுதிய வாசகங்களையே எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமாகவும் இவைகளுக்கு விளக்கமாகவும் அமையும். திர்மீதி தமிழ் மொழி பெயர்ப்பில் பி.ஜே. அவர்கள் கூறும் கருத்தைப் பார்க்கவும்: அதாவது ஆதாரப்பூர்வமான நபி மொழி குர்ஆனுக்கு ஒரு போதும் முரண்படாது. அப்படி முரண்படுவது போல் தோன்றினால் நாம் விளங்கிக் கொண்டதில்தான் தவறு என்று அர்த்தம்.
இப்பொழுது அவர் எழுதிய வாசகத்தை அவருக்கே நினைவூட்டவும் அது சரிதான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.
பி.ஜே. அவர்கள் நிராகரிக்கும் நபி மொழியும் அதற்காக அவர் கூறும் காரணங்களும்.
நபி மொழி 7433 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சூரியன் தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனும் (திருக்குர்ஆன்- 36:38வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன்.
அதற்கு அவர்கள் அதன் நிலைகொள்ளும் இடம் அரியாசனத்திற்கு கீழே உள்ளது என்றார்கள்.
நபி மொழி 4803 அபுதர் (ரலி) அறிவித்தார்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சூரியன் தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனும் (திருக்குர்ஆன் 36:38வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் அதன் நிலைகொள்ளும் இடம் இறைவனின் அரியாசனத்திற்கு கீழே உள்ளது என்று கூறினார்கள்.
நபி மொழி 7424 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:
இறைத்துதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி (ஸல்) அவர்கள் அபுதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன். அவர்கள் இது இறைவனுக்கு (அவனுடைய அரியாசனத்திற்கு கீழே) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காக செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம் நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல் என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்றிருக்கும். உடனே அது மறைந்த இடத்தில் இருந்து (இறுதி நாளில்) உதயமாகும். என்று சொல்லிவிட்டு அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும். (தாலிக்க முஸ்தஹருல்லா) என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வுத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி (திருக்குர்ஆன் 36:38வது வசனத்தை) ஓதினார்கள்.
நபி மொழி 3199 அபுதர் (ரலி) அறிவித்தார்:
நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்கு) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காக செல்கிறது. அங்கு அது (கிழக்கில் இருந்து உதயமாவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போக இருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கில் இருந்து உதயமாவதற்கு அனுமதி கேட்கும் அதற்கு அனுமதி அளிக்கப்படாது. மாறாக வந்த வழியே திரும்பிவிடு என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கில் இருந்து உதயமாகும் என்றார்கள். இதைத்தான் சூரியன் தான் நிலைகொள்ளும் ஒர் இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமைமிக்க (இறை)வனின் நிர்னயமாகும் எனும் (திர்க்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது என்றார்கள்.
நபி மொழி 4802 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:
சூரியன் மறையும் நேரத்தில் நான் நபி (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தேன். அப்போது அவர்கள் சூரியன் எங்கு (சென்று) மறைகிறது என்று உமக்குத் தெரியுமா அபுதர்ரே? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அது அர்ஷுக்கு (இறை அரியாசனத்திற்கு) கீழே சிரவணக்கம் (ஸஜ்தா) செய்வதற்காக செல்கிறது. இதைத்தான் சூரியன் தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இது வல்லமைமிக்கவனும் பேரறிவு கொண்டவனுமான (இறை)வனின் நிர்னயமாகும். எனும் (திருக்குர்ஆன் 36:38வது) இறைவசனம் குறிக்கிறது என்று கூறினார்கள்.
மேற்கண்ட நபி மொழிகள் யாவும் ஸஹிஹ் புகாரியில் பதிவு செய்யப்பட்டவைகள். இவைகளை நிராகரிக்க பி.ஜே. முக்கியமாக இரண்டு காரணங்களை சொல்கின்றார்.
No comments:
Post a Comment