ஒரு விடயத்தை அல்லது ஒரு செயலை தேர்ந்தெடுத்துக்கொள்வது என்றால் நாம் அந்த குறிப்பிட்ட விடயத்திலே அல்லது செயலிலே கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அதை மற்ற விடயங்களைவிட முன்னிறுத்துவது என்பதை நாம் அறிவோம்.இந்த உலக வாழ்க்கை மறுமை வாழ்க்கை இரண்டிலே இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொண்டால் அவர்கள் மறுமையிலே நஷ்டவாளிகளாக ஆவார்கள் என்று அல்லாஹ் (ஸுப்) சொல்கின்றான். இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும்போது மறுமை வாழ்க்கைக்குரிய தயாரிப்பிலே நாம் கவனம் செலுத்தமாட்டோம். மறுமையிலே தோல்வியை சந்திக்க வேண்டி வரும் என்று அல்லாஹ் (ஸுப்) எச்சரிக்கை விடுக்கின்றான்.நமது செயலில் உரசிப்பார்த்தால்.! நாம் இந்த உலக வாழ்க்கையில் நன்றாக வாழ வேண்டும் காசு பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்னயித்துக்கொள்கிறோம். அந்த இலக்கை அடைய வட்டிக்கு பணம் வாங்கி வெளிநாடு வருகின்றோம். இங்கு நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டது இந்த உலக வாழ்க்கையை. வந்த பின்பும் பொருளீட்ட முயற்சிப்பது ஹராமான முறையிலே. நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டது இந்த உலக வாழ்க்கையை!
நாம் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது நமது குறிக்கோளாக இருக்கின்றது. அந்த குறிக்கோளை அடைய வங்கிகளிலே வட்டிக்கு கடன் வாங்குகின்றோம். அதன் மூலம் வட்டி கொடுக்கும் பெரும் பாவத்தை செய்கின்றோம். நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டது இந்த உலக வாழ்க்கையை!
எனது மகன் பட்டம் வாங்க வேண்டும் ஒரு பொறியாளராகவோ அல்லது ஒரு மருத்துவராகவோ ஆகவேண்டும் என்று நமது வாழ்நாளையே அர்பணிக்கின்றோம். அதே நேரத்தில் அவனுக்கு தீன் கல்வியின் அறிவைக் கொடுக்க தவறி விடுகிறோம். அதன் மூலம் அவனுக்கு இந்த உலக வாழ்வை மட்டும் அனுபவிக்க வழி காட்டுகிறோம். மறுமை சிந்தனையை மறக்கடித்துவிடுகின்றோம். இங்கும் நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டது இந்த உலக வாழ்க்கையை!
கட்டாயக் கடமையான ஐவேளைத் தொழுகையைக்கூட நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றோம். வேலை பார்க்கும் சுழ்நிலை அப்படி இருக்கின்றது என்று நியாயப்படுத்தி திருப்தியடைகிறோம். ஜும்ஆவை மட்டும் நிறைவேற்றக்கூடியவர்களாக பலர் இருக்கின்றோம். ஐவேளைத் தொழுகையை தொழுகின்றவர்களும் அவசரம் அவசரமாக கோழி கொத்துவது போல் கொத்தி முடித்துக்கொண்டு இயந்தரத்தனமான வாழ்க்கையில் சங்கமித்துவிடுகின்றோம். இங்கும் நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டது இந்த உலக வாழ்க்கையை! வியாபாரத்தில் பொய் சொல்லி விற்றல் கலப்படம் செய்தல் இன்னும் என்னென்ன பித்தலாட்டங்கள் உண்டோ அவ்வளவையும் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றோம். ஆனால் பெயரிலே முஸ்லீம்களாக வலம் வருகின்றோம். நாம் தேர்வு செய்து கொண்டது இந்த உலக வாழ்க்கையை!
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment