Sunday, April 27, 2008

பொய் பேசுவதன் மூலம்!

பொய் பேசுவது மார்க்கத்திற்கு புறம்பானது. அல்லாஹ் (ஸுப்) தடை செய்தது. நாம் உண்மைக்கு மாற்றமான விஷயங்களைக் கூறி அதாவது பொய் பேசி அதனால் இந்த உலக ஆதாயங்களை அடைய ஆசைப்படுகின்றோம். சில விஷயங்களில் உண்மையைப் பேசினால் அதனால் நமக்கு தொந்தரவுகள் மற்றும் கஷ்டங்கள் வரும் என நினைத்து பொய் பேசி அதிலிருந்து தப்பிக்க முயல்கின்றோம். வேறு சில சமயங்களில் உண்மையைப் பேசினால் நமது கௌரவம் பாதிக்கப்படும் நம்மைத்தாழ்வாக நினைப்பார்கள் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு சரளமாக எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பொய் பேசுபவர்களாக இருக்கின்றோம். இப்படியாக உள்ள சில காரணங்களிலனால்தான் பொய் பேசுகின்றோம்.
இந்த உலக வாழ்க்கையிலே நாம் பொருள் புகழ் அந்தஸ்தோடு வாழ வேண்டும் என்பது நமது குறிக்கோளக இருக்கின்றது. பகட்டோடும் ஆடம்பரத்தோடும் உலா வர வேண்டும் என்பதை இலக்காக நிர்னயித்துக்கொண்டோம். நல்ல உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என்பது மட்டும் பேராசையாக இருக்கின்றது.
மேற்கண்ட அந்த இலக்குகளை அடைய நேர்மை ஒழுக்கம் உண்மை பேசுதல் மற்றும் அல்லாஹ் (ஸுப்) அனுமதித்த முறைகளிலே அவைகளை அடைவது சிரமமாக இருக்கின்றது. உண்மையாளனாக நடக்கும் போது பெரும்பான்மையான நேரங்களில் அந்த இலக்கு எட்டாக்கணியாக இருக்கின்றது.
நமக்கும் நமது இலக்குக்கும் இடையே உண்மை பேசுதல் நேர்மையாக நடத்தல் போன்றவைகள் பெரியதொரு தடுப்புச்சுவராக இருக்கின்றது. ஆகையால் அந்த தடுப்புச்சுவரை உடைக்க தகர்த்தெறிய கையில் கடப்பாறையை எடுத்துவிட்டோம். அந்த சுவரை இடிக்கும் வேலையிலே உண்டான சிறிய துவாரம் வழியாக நாம் அடைய நினைத்த இலக்கு கண்னுக்குத் தெரிகின்றது. ஆம்! இந்த உலக இன்பம் அந்த இடிபாடுகளுக்கிடையே நம்மை சுண்டி இழுக்கின்றது.
கண்னுக்கு தெரிய ஆரம்பித்த அந்த இலக்கை அடைய தடுப்புச்சுவரை உடைத்தெறிய முற்பட்டுவிட்டோம். தடுப்பாக இருந்து நம்மைக்காக்கும் அரணாக நிற்கின்ற அந்த சுவர் நம்மை நிரந்தரமான இன்பத்திற்கு இட்டுச்செல்லக்கூடியது. நிரந்தரமான துன்பத்தில் இருந்து நம்மைக்காக்கக்கூடியது என்பதையெல்லாம் மறந்துவிட்டோம். கண்னுக்குத் தெரிகின்ற இந்த உலக வாழ்க்கையிலே கிடைக்கும் சொற்ப இன்பம் நம்மை மயக்கிவிட்டது. இந்த உலக வாழ்க்கையின் சிறிய துன்பம் நம்மை அச்சுறுத்துகின்றது.
நாம் இந்த உலக வாழ்க்கையையே சதமாக நினைத்துக்கொண்டோம். பொய் பேசுவதன் மூலம் இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொண்டோம்!
இதயத்தில் நோய் உள்ளவர்கள் தான் பொய் பேசுபவர்கள் என்று அல்லாஹ் (ஸுப்) தனது திருமறையில் (2:10) ல் குறிப்பிடுகின்றான். அவர்களுக்கு நரகம்தான் என்றும் எச்சரிக்கின்றான். பொய்யுரைப்பதால் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்றும் (16:62) ன் மூலம் எச்சரிக்கை விடுக்கின்றான்.
பொய்யுரைப்பதான் மூலம் நயவஞ்சகத்தன்மை அதிகரிக்கும் என்றும் அல்லாஹ் (ஸுப்) (9:77) வது வசனத்தின் மூலம் நமக்கு உணர்த்துகிறான். பொய் பேசுபவர்களின் மீது அல்லாஹ் (ஸுப்) வின் சாபம் உண்டாகும் எனவும் மேலும் அல்லாஹ் (3:61) (24:7) ஆகிய வசனங்களின் மூலம் பொய் பேசுவதின் பயங்கரத்தை எடுத்துரைக்கின்றான். அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானோர் வெற்றி பெற முடியுமா? அல்லாஹ் (ஸுப்) அந்த தீய செயல்களைவிட்டும் நம்மைப் பாதுகாப்பானாக!
பொய் பேசுவது நம்மை எங்கு கொண்டு சேர்க்கும் என்பதை கீழ்கண்ட நபி மொழி வாயிலாகவும் இதைப்போன்ற வேறு பல நபி மொழிகள் வழியாகவும் அறியலாம் மஸ்வுத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற புகாரி முஸ்லிம் கிரந்தங்களில் இடம்பெற்ற நபி மொழியாவது:- .பொய் பேசுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் பொய் தீய வழியில் கொண்டு செல்கிறது. மேலும் தீய வழி நரகத்திற்கு கொண்டு செல்கிறது..
நாம் பொய் பேசுவது மறுமையில் நன்மை சேர்க்கும் என்பதை நாமே ஏற்றுக்கொள்ளாத ஒன்று. இந்த உலக வாழ்க்கையிலே கிடைக்கின்ற சொற்ப இன்பத்திற்காக நாம் விலைமதிக்க முடியாத சுவன வாழ்க்கையை விலை பேசிக்கொண்டிருக்கிறோம். நாம் இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொண்டோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்..

Thursday, March 20, 2008

பெருமை அடிப்பதன் மூலம்.!

பெருமை அடிப்பதன் மூலம்.!

நாம் நமது கௌரவம் பாதிக்க்கூடாது என்பதற்காக பொய் சொல்பவர்களாக இருக்கின்றோம். பொய் சொல்வது மார்க்கத்திலே தடைசெய்யப்பட்டது ஒரு சில சந்தர்ப்பங்களைத்தவிர. ஆனால் கூசாமல் சின்ன விஷயங்களுக்குகூட பொய் பேசுகிறோம். பொய் சொல்லியாவது நான் சொன்னதுதான் சரி என்று காட்டி மக்களிடத்திலே கௌரவத்தை நிலைநாட்ட முயல்கிறோம். இப்படியாக நாம் பல வழிகளிலும் தற்பெருமையடிக்கிறோம்.
எனக்கு இவ்வளவு சொத்து இருக்கிறது என்று சொல்லி பெருமையடிக்கிறோம். நம் அளவு செல்வம் இல்லாது வறுமையில் இருப்பவர்கள் நம் நெருங்கிய சொந்தங்களாக இருந்தாலும் அவர்களை மதித்து அவர்களோடு நாம் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை. நம்மைப்போல் அல்லது அதைவிட அந்தஸ்தில் உயர்ந்தவர்களைத் தேடி அவர்களோடு உறவு வைத்துக்கொள்கிறோம். இதைத்தான் பெருமையாக நினைக்கிறோம்.
பெருமை அல்லாஹ்வுக்குரியது. அவனது அடிமைகளாகிய நாம் பெருமைப்பட என்ன தகுதி இருக்கிறது? ஆனால் நாம் நமது அடிமைத்தனத்தை மறந்து நமது எஜமானனை மறந்து நம்மால்தான் எல்லாம் நடந்தது என்று நினைக்கிறோம். நம் புத்தியினால்தான் பெயரும் புகழும் செல்வமும் கிடைத்துக்கொண்டு இருக்கிறது என்று கணக்கு போட்டு கண நேரத்தில் ரப்புல் ஆலமீன் ஐ மறந்து தற்பெருமை கொள்கிறோம். இதனால் மறுமை வாழ்க்கையை மறந்து இந்த உலக இன்பத்திலும் புகழிலும் ஆழ்ந்து இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களாக ஆகிவிட்டோம்.
ஏன் என்றால் பெருமை எனக்குரியது என்று அல்லாஹ் (ஸுப்) தனது திருமறை வழியாக நமக்கு உணர்த்துகிறான். பெருமையடிப்பவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள். (அல்-குர்ஆன் 7:146 28:39 40:35 41:15 63:5)
பெருமையடிப்போருக்கு நரகம் என்றும் கீழ்கண்ட வசனங்களின் மூலம் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றான். (அல்-குர்ஆன் 16:29 22:09 39:72 40:75-76 46:20)
பெருமையடிக்காதவருக்கே சொர்க்கம் என்றும் நன்மாராயம் கூறுகின்றான். (அல்-குர்ஆன் 28:83)
ஆள் பலத்தாலும் பண வசதியாலும் பெருமைப்பட நமக்குத் தகுதியில்லை என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் உணர்த்துகின்றான். (அல்-குர்ஆன் 9:25 18:34 2:247 11:10 15:88 18:34 20:131 23:55 104:03)

மேலும் பெருமையடிப்பதானது பாவத்தின்பால் இட்டுச்செல்லும் என்றும் எச்சரிக்கின்றான். அல்-குர்ஆன் 2:206)
ஷைத்தானின் குணங்களில் பெருமையடிப்பது ஒரு குணம் என்று ஷைத்தானின் குணத்தோடு ஒப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 2:34 7:12-13 15:31 38:74)
பெருமையடிப்போரை அல்லாஹ் (ஸுப்) நான் விரும்பமாட்டேன் என்று மேலும் இருபது வசனங்கள் மூலமாக கூறுகின்றான். இன்னும் பெருமை என்ற குணம் கூடாது என்று வேறு இருபத்தெரு வசனங்களின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
ஆனால் நாம் ஒவ்வொரு விஷயத்திலும் பெருமையடிப்பவர்களாக இருக்கின்றோம். நமது பதவியையும் படிப்பையும் வைத்து பெருமையடிக்கிறோம். இந்தப்படிப்பை உணக்கு அளித்தேனே! அந்தப்பதவியை உனக்கு அளித்தேனே! அதன் மூலம் என்ன செய்தாய்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மறந்தவர்களாக இருக்கின்றோம். நமது பொருட்செல்வம் மக்கள்செல்வம் ஆகியவற்றை வைத்து பெருமையடிக்கிறோம்.
பெருமையடிப்பது என்பது வாயால் பெருமையடிப்பது மட்டுமல்ல. அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது நடவடிக்கை. நாம் துவக்கத்தில் குறிப்பிட்டதுபோல் பணம் புகழ் ஆகியவற்றில் நம்மைவிடக் குறைந்தவர்களை கேவலமாக நினைப்பது பெருமையடிப்பதாகும். இந்த அந்தஸ்தை நான் பெற்றிருக்கிறேன் அவனிடம் இது இல்லை என்று கர்வம் கொண்டு அவர்களிடம் வேற்றுமை பாராட்டுவது. இவைகளை எல்லாம் அல்லாஹ் (ஸுப்) நமக்கு அளித்து நம்மை சோதிக்கிறான் என்பதை மறந்து விட்டோம் என்பதுதான் உண்மை.
பெருமையடிப்பதன் மூலம் நீங்கள் நரகிற்கு விறகுகளாக ஆவீர்கள் என்று அல்லாஹ் (ஸுப்) கடுமையாக எச்சரித்திருக்க அதை துச்சமாக நினைத்து இல்லையெனில் அதை மறந்தவர்களாக நாம் கர்வத்துடனும் ஆணவத்துடனும் நடப்பது எதற்கு? இந்த உலகின் வரட்டு கௌரவம் அந்தஸ்த்து மற்றும் அற்ப இன்பங்களுக்கு மறுமையைவிட முக்கியத்துவம் கொடுப்பதால்தான். நாம் இந்த உலகை தேர்ந்தெடுத்துக்கொண்டதால்தான்!
இன்ஷா அல்லாஹ் தொடரும்......

Friday, February 22, 2008

நமது வாழ்வில் இம்மையும் மறுமையும் - 3

ஒரு விடயத்தை அல்லது ஒரு செயலை தேர்ந்தெடுத்துக்கொள்வது என்றால் நாம் அந்த குறிப்பிட்ட விடயத்திலே அல்லது செயலிலே கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அதை மற்ற விடயங்களைவிட முன்னிறுத்துவது என்பதை நாம் அறிவோம்.இந்த உலக வாழ்க்கை மறுமை வாழ்க்கை இரண்டிலே இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொண்டால் அவர்கள் மறுமையிலே நஷ்டவாளிகளாக ஆவார்கள் என்று அல்லாஹ் (ஸுப்) சொல்கின்றான். இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும்போது மறுமை வாழ்க்கைக்குரிய தயாரிப்பிலே நாம் கவனம் செலுத்தமாட்டோம். மறுமையிலே தோல்வியை சந்திக்க வேண்டி வரும் என்று அல்லாஹ் (ஸுப்) எச்சரிக்கை விடுக்கின்றான்.நமது செயலில் உரசிப்பார்த்தால்.! நாம் இந்த உலக வாழ்க்கையில் நன்றாக வாழ வேண்டும் காசு பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்னயித்துக்கொள்கிறோம். அந்த இலக்கை அடைய வட்டிக்கு பணம் வாங்கி வெளிநாடு வருகின்றோம். இங்கு நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டது இந்த உலக வாழ்க்கையை. வந்த பின்பும் பொருளீட்ட முயற்சிப்பது ஹராமான முறையிலே. நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டது இந்த உலக வாழ்க்கையை!
நாம் ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது நமது குறிக்கோளாக இருக்கின்றது. அந்த குறிக்கோளை அடைய வங்கிகளிலே வட்டிக்கு கடன் வாங்குகின்றோம். அதன் மூலம் வட்டி கொடுக்கும் பெரும் பாவத்தை செய்கின்றோம். நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டது இந்த உலக வாழ்க்கையை!
எனது மகன் பட்டம் வாங்க வேண்டும் ஒரு பொறியாளராகவோ அல்லது ஒரு மருத்துவராகவோ ஆகவேண்டும் என்று நமது வாழ்நாளையே அர்பணிக்கின்றோம். அதே நேரத்தில் அவனுக்கு தீன் கல்வியின் அறிவைக் கொடுக்க தவறி விடுகிறோம். அதன் மூலம் அவனுக்கு இந்த உலக வாழ்வை மட்டும் அனுபவிக்க வழி காட்டுகிறோம். மறுமை சிந்தனையை மறக்கடித்துவிடுகின்றோம். இங்கும் நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டது இந்த உலக வாழ்க்கையை!
கட்டாயக் கடமையான ஐவேளைத் தொழுகையைக்கூட நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றோம். வேலை பார்க்கும் சுழ்நிலை அப்படி இருக்கின்றது என்று நியாயப்படுத்தி திருப்தியடைகிறோம். ஜும்ஆவை மட்டும் நிறைவேற்றக்கூடியவர்களாக பலர் இருக்கின்றோம். ஐவேளைத் தொழுகையை தொழுகின்றவர்களும் அவசரம் அவசரமாக கோழி கொத்துவது போல் கொத்தி முடித்துக்கொண்டு இயந்தரத்தனமான வாழ்க்கையில் சங்கமித்துவிடுகின்றோம். இங்கும் நாம் தேர்ந்தெடுத்துக்கொண்டது இந்த உலக வாழ்க்கையை! வியாபாரத்தில் பொய் சொல்லி விற்றல் கலப்படம் செய்தல் இன்னும் என்னென்ன பித்தலாட்டங்கள் உண்டோ அவ்வளவையும் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றோம். ஆனால் பெயரிலே முஸ்லீம்களாக வலம் வருகின்றோம். நாம் தேர்வு செய்து கொண்டது இந்த உலக வாழ்க்கையை!
இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்..

Monday, February 4, 2008

நமது வாழ்வில் இம்மையும் மறுமையும் - 2

மறுமை உலகின் வெற்றி தோல்விக்கு இந்த உலக வாழ்க்கை ஒரு தேர்வுகளமாக ஆக்கப்பட்டுள்ளது என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளிலே ஒரு விஷயம். இதை நேரடியாக திருக்குர்ஆனின் பல இடங்களில் தெளிவு படுத்திய அல்லாஹ் (ஸுப்) தனது தூதர் வழியாகவும் போதித்துள்ளான்.
அதுமட்டுமல்ல இவைகளையெல்லாம் சொல்லிவிட்டு தேர்வுக்களமாகிய இவ்வுலக வாழ்க்கையை தேர்வு செய்து கொள்ளாதீர்கள் என்றும் எச்சரிக்கின்றான்.
அல்குர்ஆன்
79:3839 யார் வரம்புமீறி இவ்வுலக வாழ்க்கையை தேர்தெடுத்துக்கொண்டாரோ நிச்சயமாக நரகம் அதுவே அவர் தங்குமிடம்.
2:86 அவர்கள் தாம் மறுமையைவிற்று இவ்வுலக வாழ்வை வாங்கிக் கொண்டவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
9:38 மறுமையைவிட இவ்வுலக வாழ்வில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா? மறுமைக்கு முன்னால் இவ்வுலக வசதி அற்பமானது.
87:1617 எனினும் நீங்களோ இவ்வுலக வாழ்க்கையை தெரிவு செய்து கொள்கின்றீர்கள். மறுமைதான் மிகச்சிறந்ததும் மிக்க நிலையானதுமாகும்.
6:32 மேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமே அன்றி வேறில்லை (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்கமாட்டீர்களா?
ஆனால் இதைத்தான் நாம் இன்று செய்து கொண்டிருக்கின்றோம். இங்கு தான் நாம் வழுக்கி விழுந்து மறுமை வாழ்க்கையை கேள்விக்குறியாக ஆக்கிக்கொண்டுள்ளோம். நாம் இனிமேலாவது விழித்துக்கொண்டு கேள்விக்குறியாகி கொண்டிருக்கின்ற நமது மறுமைக்கான தேர்வுக்களமாக மட்டும் இவ்வுலக வாழ்க்கையை அல்லாஹ் (ஸுப்) கற்றுத் தந்துள்ள வழிப்படி ஆக்கிக் கொள்வோம் என முதலில் உறுதி கொள்வோமாக!
இந்த உலக வாழ்வை தேர்வு செய்வது!
இன்று பெரும்பாலான முஸ்லீம்கள் இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்து கொண்டுவிட்டனர். நமது நடவடிக்கைகள் அதைத் தெளிவாக உணர்த்திக் கொண்டுள்ளன. அவைகளை விரிவாக இதன் தொடரிலே காண்போம் இன்ஷா அல்லாஹ்.
இந்த உலக வாழ்க்கை அல்லாஹ் (ஸுப்) நமக்கு கொடுத்தது. மற்றப்படைப்பினங்களை விடவும் மனிதன் மேன்மையான படைப்பு என்று அல்லாஹ் (ஸுப்)வும் கூறுகின்றான். அதுமட்டுமல்ல மனிதனுக்கு மற்ற ஜீவராசிகளையும் வசப்படுத்திக் கொடுத்ததாகவும் பல தாவரங்களை உண்டாக்கி தந்திருப்பதாகவும் அல்லாஹ் (ஸுப்) சொல்லிக்காட்டுகிறான்.
நம்மைப் படைத்து நமக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த அல்லாஹ்வே இந்த உலக வாழ்க்கையை தேர்ந்து எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று எப்படி சொல்ல முடியும்? நாம் இவைகளை எல்லாம் அனுபவித்து மகிழவேண்டும் என்றுதானே அல்லாஹ் நமக்கு வேண்டிய வசதிகளையும் ஏற்படுத்தி தந்துள்ளான். நாமாகவே இவைகளை தேர்வுசெய்து கொள்ளவில்லையே! என்று நாம் நினைக்கக்கூடும். நாம் இந்த உலகிலே கஷ்டப்பட்டு உழல வேண்டிய அவசியம் என்ன? அல்லாஹ் (ஸுப்) ஹலாலாக்கிய முறைப்படி சம்பாதித்து இந்த உலகில் சுகபோகமாக வாழ்ந்து மறுமையிலும் வெற்றிபெற என்ன தடை? இப்படியான என்னங்கள் இன்று நம்மிடையே இருந்து கொண்டிருக்கிறது.
இங்கு நாம் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அல்லாஹ்வும் அல்லாஹ்வின் துதரும் அனுமதித்த முறையிலே எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் அதன் மூலம் நமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதற்கு எந்த ஒரு தடையுமில்லை.
இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுக்துக் கொள்வது என்பது என்ன? என்பதை நாம் குர்ஆன் நபி வழி அடிப்படையில் புரிந்து கொண்டால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அது ஒரு அடித்தளமாக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.
இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கெண்டால் அவர்கள் நஷ்டவாளிகள் என்று அல்லாஹ் (ஸுப்) கடுமையாக பல இடங்களில் எச்சரிக்கின்றான். அவைகளில் சில வசனங்களை மேலே கண்டோம். அப்படியென்றால் இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது என்ன? என்பதை நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதானே!
இன்ஷா அல்லாஹ் தொடரும்...............

Friday, January 25, 2008

நமது வாழ்வில் இம்மையும் மறுமையும் - 1

அல்லாஹ்வன் திருப்பெயரால்

நமது வாழ்வில் இம்மையும் மறுமையும் - 1
அஸ்ஸலாமு அலைக்கும்!

முஸ்லிம்களின் நிலைப்பாடு இன்றைய காலகட்டத்தில் மேற்கண்ட விஷயத்தி ல் எவ்வாறு உள்ளது? என்பதை விளக்குவதே இத்தலைப்பின் நோக்கம்.
இந்த உலக வாழ்க்கை நிரந்தரமான மறுமை வாழ்க்கையை தேர்வு செய்யும் ஒரு தேர்வு களம்தான். எல்லாவிதத்தலும் மறுமையின் இன்பத்தோடு இந்த உலக வாழ்வின் இன்பத்தை ஒப்பிட்டால் இது மிகவும் அற்பமானது. அதுமட்டுமல்ல இது நிரந்தரமானது அல்ல. ஆனால் மறுமையோ நிரந்தரமானது. மறுமையின் நரக வேதனையானது இந்த உலகில் அனுபவிக்கும் அதிகபட்சமான துன்பத்தோடு ஒப்பிட்டால் கூட இது ஒன்றுமில்லை. இது ஒரு பெரிய துன்பமும் கிடையாது. நரக வேதனையோ படுபயங்கரமானது. அல்லாஹ் (ஸுப்) அதை விட்டும் நம்மைக்காப்பாற்ற வேண்டும். அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் நல்லடியாராக நாம் இந்த உலகில் வாழ அல்லாஹ் (ஸுப்) விடம் பிரார்த்தத்துக் கொள்வோம்.
மேலே சுருக்கமாக கூறப்பட்ட கருத்தில் எந்த ஒரு முஸ்லிமுக்கும் மற்றுக்கருத்து இருக்க முடியாது. இல்லவுமில்லை. ஆனால் மிகவும் வேதனைக்குரிய விஷயம் இவையாவும் ஏட்டளவில்தான் இருக்கின்றன.
இதற்கான சான்று
ஏட்டளவில் இருக்கின்ற இந்த விஷயம் சாதாரனமான ஒரு விஷயமில்லை. ஒவ்வொரு முஸ்லிமின் இலக்கே மறுமை வெற்றியாகத்தான் இருக்க முடியும். அந்த இலக்கை நோக்கி பயணிக்காமல் அதை சிதைக்கும் விதமாக அதற்கு நேர் எதிர் திசையல் பயணிக்கின்ற நம்முடைய செயல்பாட்டை எப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்வது.
இவைகளுக்கென்ன சான்று? , இன்று நடைமுறையில் கண்முன் நடக்கின்ற நமது செயல்பாடுகள்தான் இவைகளுக்கு சான்றாக இருக்கின்றது. நமது நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன? அல்லாஹ் (ஸுப்) இதைப்பற்றி நமக்கு என்ன கட்டளையிடுகின்றான்? இவைகளை இதன் தொடர்ச்சியிலே காண்போம் இன்ஷா அல்லாஹ்!
தொடரும்..

சகோதரர் பீஜேயின் ஜகாத் பற்றிய விளக்கங்களுக்கு குர்ஆன், ஹதீஸ் வழியில் பதில்கள்.