Thursday, March 20, 2008

பெருமை அடிப்பதன் மூலம்.!

பெருமை அடிப்பதன் மூலம்.!

நாம் நமது கௌரவம் பாதிக்க்கூடாது என்பதற்காக பொய் சொல்பவர்களாக இருக்கின்றோம். பொய் சொல்வது மார்க்கத்திலே தடைசெய்யப்பட்டது ஒரு சில சந்தர்ப்பங்களைத்தவிர. ஆனால் கூசாமல் சின்ன விஷயங்களுக்குகூட பொய் பேசுகிறோம். பொய் சொல்லியாவது நான் சொன்னதுதான் சரி என்று காட்டி மக்களிடத்திலே கௌரவத்தை நிலைநாட்ட முயல்கிறோம். இப்படியாக நாம் பல வழிகளிலும் தற்பெருமையடிக்கிறோம்.
எனக்கு இவ்வளவு சொத்து இருக்கிறது என்று சொல்லி பெருமையடிக்கிறோம். நம் அளவு செல்வம் இல்லாது வறுமையில் இருப்பவர்கள் நம் நெருங்கிய சொந்தங்களாக இருந்தாலும் அவர்களை மதித்து அவர்களோடு நாம் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை. நம்மைப்போல் அல்லது அதைவிட அந்தஸ்தில் உயர்ந்தவர்களைத் தேடி அவர்களோடு உறவு வைத்துக்கொள்கிறோம். இதைத்தான் பெருமையாக நினைக்கிறோம்.
பெருமை அல்லாஹ்வுக்குரியது. அவனது அடிமைகளாகிய நாம் பெருமைப்பட என்ன தகுதி இருக்கிறது? ஆனால் நாம் நமது அடிமைத்தனத்தை மறந்து நமது எஜமானனை மறந்து நம்மால்தான் எல்லாம் நடந்தது என்று நினைக்கிறோம். நம் புத்தியினால்தான் பெயரும் புகழும் செல்வமும் கிடைத்துக்கொண்டு இருக்கிறது என்று கணக்கு போட்டு கண நேரத்தில் ரப்புல் ஆலமீன் ஐ மறந்து தற்பெருமை கொள்கிறோம். இதனால் மறுமை வாழ்க்கையை மறந்து இந்த உலக இன்பத்திலும் புகழிலும் ஆழ்ந்து இந்த உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களாக ஆகிவிட்டோம்.
ஏன் என்றால் பெருமை எனக்குரியது என்று அல்லாஹ் (ஸுப்) தனது திருமறை வழியாக நமக்கு உணர்த்துகிறான். பெருமையடிப்பவர்கள் நேர்வழி பெறமாட்டார்கள். (அல்-குர்ஆன் 7:146 28:39 40:35 41:15 63:5)
பெருமையடிப்போருக்கு நரகம் என்றும் கீழ்கண்ட வசனங்களின் மூலம் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றான். (அல்-குர்ஆன் 16:29 22:09 39:72 40:75-76 46:20)
பெருமையடிக்காதவருக்கே சொர்க்கம் என்றும் நன்மாராயம் கூறுகின்றான். (அல்-குர்ஆன் 28:83)
ஆள் பலத்தாலும் பண வசதியாலும் பெருமைப்பட நமக்குத் தகுதியில்லை என்பதை கீழ்க்கண்ட வசனங்களில் உணர்த்துகின்றான். (அல்-குர்ஆன் 9:25 18:34 2:247 11:10 15:88 18:34 20:131 23:55 104:03)

மேலும் பெருமையடிப்பதானது பாவத்தின்பால் இட்டுச்செல்லும் என்றும் எச்சரிக்கின்றான். அல்-குர்ஆன் 2:206)
ஷைத்தானின் குணங்களில் பெருமையடிப்பது ஒரு குணம் என்று ஷைத்தானின் குணத்தோடு ஒப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 2:34 7:12-13 15:31 38:74)
பெருமையடிப்போரை அல்லாஹ் (ஸுப்) நான் விரும்பமாட்டேன் என்று மேலும் இருபது வசனங்கள் மூலமாக கூறுகின்றான். இன்னும் பெருமை என்ற குணம் கூடாது என்று வேறு இருபத்தெரு வசனங்களின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
ஆனால் நாம் ஒவ்வொரு விஷயத்திலும் பெருமையடிப்பவர்களாக இருக்கின்றோம். நமது பதவியையும் படிப்பையும் வைத்து பெருமையடிக்கிறோம். இந்தப்படிப்பை உணக்கு அளித்தேனே! அந்தப்பதவியை உனக்கு அளித்தேனே! அதன் மூலம் என்ன செய்தாய்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மறந்தவர்களாக இருக்கின்றோம். நமது பொருட்செல்வம் மக்கள்செல்வம் ஆகியவற்றை வைத்து பெருமையடிக்கிறோம்.
பெருமையடிப்பது என்பது வாயால் பெருமையடிப்பது மட்டுமல்ல. அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது நடவடிக்கை. நாம் துவக்கத்தில் குறிப்பிட்டதுபோல் பணம் புகழ் ஆகியவற்றில் நம்மைவிடக் குறைந்தவர்களை கேவலமாக நினைப்பது பெருமையடிப்பதாகும். இந்த அந்தஸ்தை நான் பெற்றிருக்கிறேன் அவனிடம் இது இல்லை என்று கர்வம் கொண்டு அவர்களிடம் வேற்றுமை பாராட்டுவது. இவைகளை எல்லாம் அல்லாஹ் (ஸுப்) நமக்கு அளித்து நம்மை சோதிக்கிறான் என்பதை மறந்து விட்டோம் என்பதுதான் உண்மை.
பெருமையடிப்பதன் மூலம் நீங்கள் நரகிற்கு விறகுகளாக ஆவீர்கள் என்று அல்லாஹ் (ஸுப்) கடுமையாக எச்சரித்திருக்க அதை துச்சமாக நினைத்து இல்லையெனில் அதை மறந்தவர்களாக நாம் கர்வத்துடனும் ஆணவத்துடனும் நடப்பது எதற்கு? இந்த உலகின் வரட்டு கௌரவம் அந்தஸ்த்து மற்றும் அற்ப இன்பங்களுக்கு மறுமையைவிட முக்கியத்துவம் கொடுப்பதால்தான். நாம் இந்த உலகை தேர்ந்தெடுத்துக்கொண்டதால்தான்!
இன்ஷா அல்லாஹ் தொடரும்......